கொழும்பில் முதன் முதலாக ஊடக பேரமர்வு அங்குரார்ப்பணம் – துறைசார் நிபுணர்கள் பங்கேற்பு

இலங்கை இந்திய ஊடக நட்புறவு சங்கத்தால் (SLIMFA) முதன் முதலாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள ஊடக பேரமர்வினை இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே,வெகுசன ஊடகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோர் கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கூட்டாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.
புதிய ஊடக தோற்றப்பாடுகளை ஒன்றிணைந்து கண்டறிதல் என்ற தொனிப் பொருளில் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில்
இந்த ஊடகப் பேரமர்வானது நடைபெற்றது.
சமகால ஊடக செல்நெறிகள் மற்றும் ஏனைய புதிய அம்சங்கள் தொடர்பாக இந்த அமர்வுகளில் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் ஊடக துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, கையடக்க தொலைபேசிகள் மூலமான ஊடக செயல்பாடுகள், ஊடகத்துறை அடிப்படையிலான வருமான வழிகள், தரவுகள் சார்ந்த ஊடகவியல், தவறான தரவுகள் மற்றும் உண்மைகளை சரிபார்த்தல், கருப்பொருள் உருவாக்கம் மற்றும் ஒலிசார் ஊடகம் உள்ளிட்ட முக்கிய விடயங்களிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையில் முதல் தடவையாக நடைபெறும் ஊடகத்துறை சார்ந்த குறித்த நிகழ்வானது சிறப்புரைகள், குழுநிலை விவாதங்கள், பக்க அமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டிருந்தது.
அத்துடன் தொழில் ரீதியான அபிவிருத்தி மற்றும் இந்தியா இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இடையிலான ஒத்துழைப்பினை வலுவாக்கல் ஆகியவற்றுக்கு இந்த அமர்வு தனித்துவமான களத்தினை வழங்கியுள்ளது.
இந்தியாவிலிருந்து பங்கேற்கும் நிபுணர்களில் First Post நிறுவனத்தின் முகாமைத்துவ ஆசிரியர் பால்கி சர்மா, WION நிறுவனத்தின் வெளிநாட்டுச் செய்திகள் பிரிவின் உதவி ஆசிரியர், சித்தாந்த் சிபல் இந்தியா டுடே நிறுவனத்தின் பிரதான ஒருங்கிணைப்பு அதிகாரி சைலேஷ் சேகர் மற்றும் TAM ஊடக ஆய்வு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எல் வி கிருஷ்ணன், ஆகியோர் பங்கு பற்றினர்.
அத்துடன் இலங்கையைச்சேர்ந்த துறை சார்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டு ஊடகத்துறை சார்ந்த மற்றும் வர்த்தக துறையைச் சார்ந்த சமூகத்தினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வழிகாட்டலுடன் 2024 மே மாதத்தில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை இந்திய ஊடக நட்புறவு சங்கம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஊடகத்துறை சார்ந்த உறவுகளை வலுவாக்குவதனை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.
அதன் உருவாக்கம் முதல் பல்வேறு நிகழ்வுகள் குறிப்பாக குழுநிலை விவாதங்கள் வட்டமேசை கலந்துரையாடல்கள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் ஊடகத்துறை சார்ந்த விடயங்களை கவனத்தில் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
அது மட்டுமல்லாமல் நாகரீக ரீதியாக இரட்டையர்கள் என வர்ணிக்கப்படும் இவ்விரு நாடுகளின் தொடர்புகளை மேம்படுத்துவதிலும் இந்த முன்னெடுப்பு கணிசமான வகிபாகத்தினை கொண்டிருக்கின்றது.