
படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் திட்டம் இங்கிலாந்திடம் இல்லை – எச்சரிக்கை விடுப்பு
இராணுவத் தாக்குதல்களில் இருந்து தன்னையும் வெளிநாட்டுப் பிரதேசங்களையும் பாதுகாத்துக் கொள்ளும் வலிமை இங்கிலாந்துக்கு இல்லை என்று நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஐரோப்பாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், தன்னையும் நட்பு நாடுகளையும் பாதுகாக்க வேண்டிய இடத்திற்கு அருகில் இங்கிலாந்து இல்லை என்று பாதுகாப்புக் குழு கூறியுள்ளது.
நேட்டோவின் கடமைகளை நிறைவேற்றுவதில் இங்கிலாந்து தோல்வியடைந்து வருவதாகவும், “அதன் தலைமைத்துவ நிலையை அடைய மிகவும் பின்தங்கியுள்ளதாகவும்” அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிக்கும் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, ஆறு புதிய ஆயுத தொழிற்சாலைகளுக்கான சாத்தியமான இடங்களை பாதுகாப்பு அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.
இவ்வாறான நிலையில், மிகவும் முக்கியதுவம் வாய்ந்த இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில், இங்கிலாந்தை “போர் தயார்நிலைக்கு” நகர்த்துவதற்கான திட்டங்களை பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி அறிவித்திருந்தார்.
இதில் தனியார் பிரிவினரால் கட்டப்படும் புதிய ஆயுத தொழிற்சாலைகளின் கட்டுமானத்தை ஊக்குவிக்கும் வகையில் 1.5 பில்லியன் பவுண்ட்ஸ் நிதியும் ஒதுக்கீடும் அடங்கும்.
எனினும், கடந்த 11 மாத ஆய்வுகளுக்கு பின்னர், இங்கிலாந்தும் அதன் ஐரோப்பிய நேட்டோ நட்பு நாடுகளும் அமெரிக்காவை அதிகமாக நம்பியிருப்பதாகவும் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.
மேலும், இங்கிலாந்து அதன் சொந்த பாதுகாப்புக்காக போதுமான அளவு நிதியை செலவிடவில்லை என்றும் பாதுகாப்பு குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“ரஷ்ய ஜனாதிபதி புடினின் உக்ரைன் மீதான மிருகத்தனமான படையெடுப்பு மற்றும் ஐரோப்பிய வான்வெளியில் ஊடுறுவும் போக்கு நம் தலையை மணலில் புதைக்க முடியாது என்பதைக் குறிக்கிறது” என்று அந்தக் குழுத் தலைவர் தன்மன்ஜீத் சிங் தேசி தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் இங்கிலாந்தின் திறன் குறித்த கவலைகளை பாதுகாப்பு குழு மீண்டும் மீண்டும் கேட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், தொழில்துறை மாற்றத்தின் வேகத்தை விரைவுபடுத்தவும், தயார்நிலையை ஒரு முக்கிய குறிக்கோளாக மாற்ற கோரியும் அரசாங்கத்தை வலியுறுத்தி பாதுகாப்பு குழு தனது அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
