எக்ஸ் தளத்தில் தனது பெயரை மாற்றிய எலான் மஸ்க்
உலக பணக்காரர்களில் ஒருவரும் எக்ஸ் சமூக வலைத்தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், தன்னுடைய எக்ஸ் முகப்பு பக்கத்தில் உள்ள பெயரை கெகியஸ் மேக்சிமஸ் என பெயர் மாற்றம் செய்து உள்ளார்.
இதேபோன்று, அதில் உள்ள புகைப்படத்திலும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, பெப் தி பிராக் என்ற தவளையின் படம் இடம் பெற்று உள்ளது.
இந்த தவளை பற்றிய புகைப்படம் பல ஆண்டுகளாக நிகழ்நிலையில் டிரெண்டிங்கில் உள்ளது. நகைச்சுவை மற்றும் கிண்டல் ஆகியவற்றை அடையாளப்படுத்தும் வகையில் அனைத்து வகையிலான பதிவுகளிலும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதேவேளை, கெகியஸ் மேக்சிமஸ் என்ற பெயர் கிரிப்டோ கரன்சியுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. எலான் மஸ்கின் முகப்பு பெயர் மாற்றத்திற்கும், கிரிப்டோ கரன்சிக்கும் உள்ள தொடர்பு பற்றி தெளிவாக அறியப்படவில்லை.
எவ்வாறாயினும் எலான் மஸ்க் ஒரு பதிவில், கெகியஸ் மேக்சிமஸ் விரைவில் 80 என்ற அளவை எட்டும் என்று தெரிவித்து உள்ளார். இதனால், கிரிப்டோ கரன்சியை அவர் வரவேற்கிறார் என்றும் கூறப்படுகிறது.