சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி வழிதடத்தில் திடீரென மின்சார ரயில்கள் ரத்து – பயணிகள் சிரமம்

சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி வழிதடத்தில் நேற்று திடீரென 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைத்
தொடர்ந்து பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை தடத்தில், ரயில்பாதை பராமரிப்பு பணி காரணமாக 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்தது.
இதேவேளை, சென்ட்ரல் – எண்ணூர், மீஞ்சூர் வரையில் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
இருப்பினும், இந்த திடீர் அறிவிப்பால் சென்ட்ரல், கொருக்குப்பேட்டை, பேசின்பிரிட்ஜ், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் மின்சார ரயிலுக்காக ஒரு மணி நேரம் வரை காத்திருந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
‘அறிவிப்பு வெளியிடப்பட்டு, அடுத்த 02 மணி நேரத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக பயணிகள் குற்றம் சுமத்தியதுடன்
முன்கூட்டியே தெரியப்படுத்தியிருந்தால் பயணத்தைத் திட்டமிட்டிருப்போம் என ஆதங்கம் வெளியிட்டனர்.