கொழும்பிலிருந்து மும்பைக்கு கடத்தப்பட்ட போதைப்பொருள் – பல கோடி ரூபா பெறுமதி

இந்தியாவின் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் 47 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து மும்பைக்கு சென்ற விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பெண் பயணி ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பில் மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து மும்பைக்கு வரும் விமானத்தில் கொகைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ஒரு பெண் பயணியின் உடமைகளை பரிசோதித்தனர்.
இதன்போது 09 தேயிலை தூள் பக்கெற்றுகளில் மறைத்து வைத்திருந்த கொகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
சுமார் 4.7 கிலோ நிறையுடன் அதன் மதிப்பு 47 கோடி ரூபா ஆகும்.
கொகைன் கடத்தி வந்த பெண், அதை வாங்கிச் செல்ல வந்த ஒருவர் உட்பட 5 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சர்வதேச போதை கடத்தல் கும்பல், அண்மை காலமாக போதைப்பொருளை கடத்த இந்திய பெண்களை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இதனைக் கண்டறிவதைத் தடுக்க உணவுப் பொருட்களுக்குள் வைத்து கடத்துகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
