தபால் மூலம் கடத்தப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் – 312 மில்லியன் ரூபாஅதிக பெறுமதி

வெளிநாடுகளிலிருந்து தபால் மூலமாக நாட்டிற்கு அனுப்பப்பட்ட சுமார் 310 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று பிற்பகல் கொக்கெய்ன் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஜெர்மனி, செக் குடியரசு, சாம்பியா (Zambia), அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட ஏழு கூரியர் பொதிகளுக்குள் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு, கொழும்பு, பாணந்துறை, வத்தளை, ராஜகிரிய மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.