நிபா வைரஸ் அபாயத்தை புறக்கணிக்க வேண்டாம்!! வைத்திய நிபுணர் எச்சரிக்கை

நிபா வைரஸ் அபாயத்தை புறக்கணிக்க வேண்டாம்!! வைத்திய நிபுணர் எச்சரிக்கை

இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ள நிபா வைரஸ் நிலைமையை இலங்கை சுகாதார அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருபவர்களை மையமாகக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் நிபுணர் வைத்தியர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், குடியேற்றம் மற்றும் நுழைவுப் பகுதிகளில் அதிகரித்த விழிப்புணர்வின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வரும் விமான நிலையங்கள் மற்றும் பிற நுழைவுப் பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வு திட்டங்கள், இரத்தம் தொடர்பான சுகாதார ஆலோசனை மற்றும் பொருத்தமான இடங்களில் தடுப்பூசி தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

நிபா வைரஸ் என்பது வௌவால்களால் முக்கியமாகப் பரவும் ஒரு ஜூனோடிக் வைரஸ் ஆகும், மேலும் இது மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கக்கூடும்.

இலங்கையில் இதுவரை எந்த நோயாளர்கள் கண்டறியப்படவில்லை என்றாலும், வைரஸின் பரவல் தொடர்பில் தீவர கவனம் தேவை என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நிபா வைரஸ் மனிதர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

காய்ச்சல், உடல் வலி, தசை வலி மற்றும் வாந்தி ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும், அதே நேரத்தில் கடுமையான நேரங்களில் மூளை வீக்கம் ஏற்படலாம் எனவும் இது ஆபத்தானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வௌவால்களின் சிறுநீர், உமிழ்நீர் அல்லது மலம் ஆகியவற்றுடன் நேரடித் தொடர்பு, அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை உட்கொள்வது மற்றும் பன்றிகள் போன்ற பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த வைரஸ் பரவுவதாக அறியப்படுகிறது.

இந்நிலையில், நோய் தொற்றாளர் ஒருவர் கண்டறியப்படும் வரை காத்திருக்கக்கூடாது என்று வைத்தியர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களும், மாசுபட்ட உணவை உட்கொள்பவர்களும் விழிப்புடன் இருக்கவும், அதிகாரிகள் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அவர் அறிவுறுத்தினார்.

அதே நேரத்தில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய ஆபத்தைத் தடுக்க முன்கூட்டியே எச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )