செல்லுபடியற்ற விசாவுடன் இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடல்

செல்லுபடியற்ற விசாவுடன் இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடல்

 இலங்கையுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் இரண்டாவது கூட்டத்தில் செல்லுபடியாகும் விசாக்கள் இன்றி இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு தொழிலாளர்கள் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டா தெரிவித்துள்ளார்.

இந்த குழுவின் அடுத்த அமர்வில் இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த கவலை இலங்கையர்களுக்கும் அப்பால் பிற வெளிநாட்டினரையும் பாதிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே விசா விடயத்துக்கும் மேலதிகமாக, இலங்கை நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு இஸ்ரேலில் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவர் சேகா மெலாகு, இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் பிரதிநிதிகள் மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தின் துணை தலைவர் ஹேமந்த ஏகநாயக்க ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Share This