அரச அதிகாரிகள் அலுவலகப் பணிகளை எளிதாக மேற்கொள்ள டிஜிட்டல் கையொப்பம்

அரச அதிகாரிகள் அலுவலகப் பணிகளை எளிதாக மேற்கொள்ள டிஜிட்டல் கையொப்பம்

அரச அதிகாரிகள் அலுவலகப் பணிகளை எளிதாகவும் திறமையாகவும் மேற்கொள்ள டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி புதிய பாதைக்கு கொண்டு செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டொக்டர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சின் உள்துறை பிரிவின் பொது அதிகாரிகளுக்கான டிஜிட்டல் கையொப்பங்களை அங்கீகரிக்கும் நிகழ்வில் நேற்று(15) திங்கட்கிழமை கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மக்கள் எதிர்பார்க்கும் திறமையான பொது சேவையை உருவாக்குவதே தனது நோக்கம் என்றும், இந்த புதிய தொழில்நுட்பத்தை கிராம சேவையாளரிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அலுவலகப் பணிகளை எளிதாகவும் திறமையாகவும் மாற்றுவதற்காக, 2006 ஆம் ஆண்டு 19 ஆம் எண் மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின்படி, உள்நாட்டலுவல்கள் பிரிவின் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அதிகாரிகளின் கையொப்பங்களை டிஜிட்டல் மயமாக்கும் செயன்முறை இங்கு ஆரம்பமானது.

இந்த செயற்றிட்டத்தினூடாக தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என்பதுடன் மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள சேவையை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்நிகழ்வில் ​​பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக பண்டார, உள்நாட்டலுவல்கள் பிரிவின் மேலதிக செயலாளர்களான கலாநிதி ரோஷினி திஸாநாயக்க, ஏ.ஜி.நிஷாந்த, சித்ரா திலகரத்ன, தம்மிக்க முத்துகல, ஓமலி விமலரத்ன, மற்றும் பிரதம நிதிப் பணிப்பாளர் ஜெனரல் ஜே. ஏ.நஸார், கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கீகனகே மற்றும் உள்நாட்டலுவல்கள் பிரிவின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Share This