
13 வயது சிறுவனால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை – ஆப்கானிஸ்தானில் சம்பவம்
ஆப்கானிஸ்தானில் இருந்து அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றின் காணொளி வெளியாகியுள்ளது.
80,000 பேர் முன்னிலையில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி மூலம் சுடப்பட்டு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மரணதண்டனை 13 வயது சிறுவனால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த காணொளி தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் தண்டனையை நிறைவேற்றியவரின் குடும்பத்தினரைக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
தாலிபான் அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டதுடன், ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்து தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து தாலிபான் உச்சத் தலைவர் ஹிபதுல்லா அகுந்த்சாதா அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற அனுமதி அளித்திருந்தார்.
பின்னர் 13 வயது சிறுவனிடம் குற்றவாளியை மன்னிக்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டது, அதற்கு சிறுவன் திட்டவட்டமாக மறுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அதிகாரிகள் மரணதண்டனையை நேரில் காண பொது மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். மரணதண்டனையைக் காண சுமார் 80,000 பேர் கொண்ட கூட்டம் கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான் அதிகாரிகள் 13 வயது சிறுவனிடம் துப்பாக்கியைக் கொடுத்து மரணதண்டனையை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தினர். சிறுவன் பொது மக்கள் முன்னிலையில் தண்டனையை நிறைவேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணதண்டனை நிறைவேற்றப்படும் கொடூரமான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 80,000 பேர் நிறைந்த ஒரு பொது இடத்தில், துப்பாக்கிச் சூடு மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
