முல்லைத்தீவு இளைஞனுக்கு நீதி கோரி வடக்கு,கிழக்கில் ஹர்த்தால் – இ.தொ.கா ஆதரவு

வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞரின் மரணத்தக்கு நீதிகோரி இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு இலங்கையராகவும், மலையக தமிழராகவும், தனது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துருப்பதாவது,
“நீதிக்கான கோரிக்கையிலும், இராணுவத்தின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடைபெறவுள்ள இந்த ஹர்த்தாலுக்கு, எனது ஒற்றுமையையும் உறுதியான ஆதரவையும் வெளிப்படுத்துகின்றேன்.
யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த பின்பும், இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் நிகழ்வது மிகவும் வருத்தமளிப்பதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வலியுறுத்துகின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.