
தமிழ்நாட்டின் உள்ளக அரசியலில், இலங்கை துணைத் தூதுவர் தலையீடு என தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு
தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதுவர் கணேசநாதன் கேதீஸ்வரன், புதுச்சேரியில் காங்கிரசிற்கும் தி.மு.கவிற்கும் எதிரான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் உள்ளக அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்வதாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அவரை குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த குற்றச்சாட்டை அகில இந்திய காங்கிரஸ் குழுவின் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா முன்வைத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக கணேசநாதன் கேதீஸ்வரன் மீது தேர்தல் ஆணையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் இலங்கை தூதரகம் ஆரம்பிக்கப்பட்டு 40 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இதுவரை தூதுவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படாத நிலையில், துணை தூதுவர் ஒருவர் மீது வரலாற்றில் முதன்முறையாக குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
கேதீஸ்வரன், வைதிகுப்பம் பகுதியில் நடைபெற்ற காங்கிரசிற்கும் தி.மு.கவிற்கும் எதிரான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அங்குள்ள உள்ளூர் மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்துள்ளதுடன், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கோரிக்கைக்கமைய, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உறுதியளித்தார்.
இந்த கூட்டம் இலட்சிய ஜனநாயகக் கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்ல்ஸ் மார்டின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வி.பி.ராமலிங்கமும் இதில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘X’ சமூக தளத்தில் பவன் கேரா வெளியிட்டுள்ள கருத்தில், நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு தூதர்கள் தலையீடு செய்யக் கூடாது என்று கூறும் வியன்னா தூதரக உறவுகள் ஒப்பந்தத்தை இந்த நிகழ்வில் இலங்கை தூதரின் பங்கேற்பு மீறப்பட்டுள்ளதாக பவன் கேரா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்றும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இதுகுறித்து தூதரக ரீதியான பதிலை வழங்குவாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
