சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் CID விசாரணை

சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிவில் குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களது வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழுமையான தகவல்கள் தொடர்பிலான வெளிப்படுத்தல்களுக்கு நீதிமன்ற உத்தரவுகள் பெறப்படும் எனவும்
கூறப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பாதாள உலக நபர்களுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் ஜனாதிபதி மன்னிப்புகளை தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக பணியாற்றிய அதிகாரிகளின் இடமாற்றங்கள் உட்பட துறை மறுசீரமைப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நீதி அமைச்சின் செயலாளர் உட்பட உயர் அரச அதிகாரிகள் பலர், ஜனாதிபதி மன்னிப்பை கைதிகளை விடுவிப்பதற்காக தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவது தொடர்பாக விசாரிக்கப்படுவார்கள் என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கூறினார்.