கொழும்பில் சீன நாட்டவர் கடத்தப்பட்டு தாக்குதல்

கொழும்பில் தங்கி வியாபாரம் செய்து கொண்டிருந்த சீன நாட்டவர் ஒருவர் மற்றுமொரு சீன கும்பலால் கடத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 22ஆம்திகதி இரவு கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து அவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வான்களில் வந்த எட்டு சீன நாட்டவர்கள் வணிக வளாகத்தில் தங்கியிருந்த சீன நாட்டவரை கடத்திச் சென்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட சீன நாட்டவரின் கண்கள் கட்டப்பட்டு, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வாகனத்தில் சுமார் ஒரு மணி நேரம் அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தலில் ஈடுபட்ட சீன நாட்டவர்களைக் கொண்ட கும்பல், கடத்தியவரை தாக்கி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ஒரு மில்லியன் ரூபாய்க்கு மேல் வேறொரு கணக்கிற்கு மாற்றியதாக கூறப்படுகின்றது.
கடத்தப்பட்ட சீன நாட்டவர் பின்னர் நேற்று (23) மதியம் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்போது கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாகவும் இவ்வாறு ஒரு தான் கடதப்பட்டு தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் கூறியுள்ளனர்.