சென்னை அணியின் தொடர் தோல்வி – கடுமையாக எதிர்வினையாற்றிய அஸ்வின்

சென்னை அணியின் தொடர் தோல்வி – கடுமையாக எதிர்வினையாற்றிய அஸ்வின்

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்துவரும் அவலநிலைகள் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் ரவி அஸ்வின் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

நேற்று ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிராக அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அஸ்வின் இவ்வாறு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

சென்னை அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெறும் முடிவு தனக்கு மிகுந்த வேதனையை அளித்ததாக அஸ்வின் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

“நான் மனதளவில் மிகுந்த சிரமத்தில் இருந்தேன். என்னால் இன்னும் அதிகமாக விளையாடியிருக்க முடியும், ஆனால் அதற்கான ஆற்றல் என்னிடம் இல்லை. நான் சென்னையில் தொடங்கி சென்னையிலேயே முடிப்பேன் என்று நினைத்தேன்.

என்னை அணியில் வைத்திருப்பதா அல்லது விடுவிப்பதா என்ற தலைவலியை நிர்வாகத்திற்குக் கொடுக்க விரும்பாததால், நான் ஓய்வு பெற முடிவு செய்தேன்.

அது அவர்களுக்கு 10 கோடி ரூபாயை சேமிக்க உதவியது என்று அஸ்வின் கூறினார்.

கடந்த ஆண்டு அணியில் நடந்தவை குறித்து அதிகம் பேச விரும்பாத அஸ்வின், அது இன்னும் தன்னை பாதிப்பதாகக் கூறினார்.
அனுபவமிக்க வீரர்களை விலக்கிவிட்டு இளம் வீரர்களை உள்ளே கொண்டுவரும் சென்னை அணியின் உத்தியையும் அஸ்வின் கேள்விக்குள்ளாக்கினார்.

இளம் வீரர்களுக்கு முறையான பயிற்சியையும் சூழலையும் வழங்குவதில் அணி தவறி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் துடுப்பாட்ட வீரர்கள் பலத்தைப் புரிந்து கொள்ளாமல் பந்து வீசுகிறார்கள்.

அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் தங்களுடைய பாணிக்கு மாறான ‘வைட் யோர்க்கர்களை’ வீசியதுதான், டிம் டேவிட் மற்றும் ஏனைய வீரர்கள் சென்னை அணியை வீழ்த்தியதற்கு காரணம் என்றும் அஸ்வின் விமர்சித்தார்.

இந்த பருவத்தில் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த சென்னை அணி, புள்ளிப் பட்டியலில் பின்தங்கியுள்ளது. அந்த அணியால் தற்போது ஒரு முறையான ஆடும் பதினொருவர் அணியை கூட அமைக்க முடியவில்லை.

நேற்றையப் போட்டியில் பெங்களூருவிடம் அடைந்த தோல்வியும் அணியின் நம்பிக்கையைப் பாதித்துள்ளது.

பெங்களூரு அணி நல்ல நிலையில் இருப்பதாகவும், அவர்கள் மற்ற அணிகளுக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்து வருவதாகவும் அஸ்வின் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )