17 வயது இளம் அதிரடி வீரரை அணுகியது சென்னை அணி

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக 17 வயது மும்பை வீரர் ஆயுஷ் மாத்ரேவை அழைக்க அணி முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த வீரர் விரைவில் அணியில் இணைவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, ஐபிஎல் மெகா ஏலத்தில் விற்கப்படாத பிரித்வி ஷா, கெய்க்வாட்டுக்கு பதிலாக சென்னை அணியில் சேர்க்கப்படுவார் என்று செய்திகள் வந்தன.
ஆனால் சமீபத்திய அறிக்கையின்படி, கெய்க்வாட்டுக்கு பதிலாக இந்த 17 வயது இளைஞரை சென்னை அணிக்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக ஆயுஷ் மாத்ரேவை அணுகியுள்ளனர். அணியுடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 20 ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அணியில் இணைந்துகொள்வார்” என்று வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
17 வயதான மாத்ரே ஏற்கனவே மும்பை கிரிக்கெட்டில் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் ஏற்கனவே ஒன்பது முதல் தர போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் உட்பட 504 ஓட்டங்களை குவித்துள்ளார்.
ஏழு லிஸ்ட் ஏ போட்டிகளில் இருந்து இரண்டு சதங்களுடன் 458 ஓட்டங்களை குவித்துள்ளார். இவர் கடந்த ஒக்டோபரில் முதல்தரப் போட்டியில் அறிமுகமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐப்எல் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளதுடன், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.
மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியை தவிர தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்து மிக மோசமான நிலையில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.