ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடக்கவுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம் கடமையை நிறைவேற்றத் தவறியதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை ஜூலை 28ஆம திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (30) நாமல் பலல்லே மற்றும் மொஹமட் இர்ஷதீன் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்கும் போது, மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வின் உறுப்பினரான நீதிபதி ஆதித்ய படபெந்திகே, இப்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளதாகவும், எனவே மூன்று பேர் கொண்ட அமர்வில் வெற்றிடமாக உள்ள இடத்தை நிரப்ப தலைமை நீதிபதியால் நியமிக்கப்படவுள்ள புதிய நீதிபதிக்காக காத்திருப்பதாகவும் கூறினார்.

அதன்படி, இந்த வழக்கின் விசாரணைக்கு வேறு திகதியை வழங்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தைக் கோரினார்.

அதன்படி, தொடர்புடைய வழக்கை ஜூலை 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை விடுவித்து மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற அமர்வு முன்னர் உத்தரவிட்டிருந்தது.

இருப்பினும், எதிர்த்தரப்பினரை அழைக்காமல் விடுதலை செய்ய மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற அமர்வு எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று கோரி, சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட வழக்குகளில் எதிர்த்தரப்பினரை வரவழைத்து, மீண்டும் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க உத்தரவிட்டது. இதற்மைய வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

Share This