காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

காட்டு யானைகளிடமிருந்து தங்களின் உயிர்களையும் உடமைகளை பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் இன்று (19) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேப்ப வெட்டுவான் – இலுப்படிச்சேனை பிரதான வீதி வழியாக இலுப்படிச்சேனை சந்தி வரை பேரணியாக சென்று இலுப்படிச்சேனை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு வேண்டும், அரசே கவனமெடு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகரிகளே எங்களுக்கு தீர்வைப்பெற்றுத்தா” என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு சுமார் 1 மணி நேரம் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கலடி பதுளை வீதியை அண்மித்த பகுதிகளில் காட்டு யானைகளினால் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் உயிர் ஆபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.

நேற்றிரவு (18) பலர்சேனை கிராமத்துக்களுள் புகுந்த யானை தென்னை மரங்களை அழித்துள்ளது. கடந்த வாரம் சின்னபுல்லுமலை கிராமத்துக்கள் புகுந்த காட்டு யானைகள்
இரண்டு வீடுகளை உடைத்து சேதமாக்கியுள்ளன.

காட்டு யானைகளின் பிரச்சினைகள் தொடர்பாக பல முறை முறைப்பாடுகள் செய்த போதிலும் இதுவரை தமக்கு தீர்வு கிடைக்கவில்லையென அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This