
அம்பலாங்கொட துப்பாக்கிச் சூடு: சிகிச்சைப் பலனின்றி இளைஞர் உயிரிழப்பு
அம்பலாங்கொட, கலகொட சுனாமிவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 28 வயதுடைய இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீடொன்றில் நடைபெற்ற ஒரு விருந்துபசாரத்தின் போதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதியிலிருந்து வந்த இருவர், அங்கிருந்தவர்கள் மீது திடீரெனத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு ‘பிஸ்டல்’ ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக அம்பலாங்கொட பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
