நடிகர் அபிநய் காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்

‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபிநய் உடல் நலக்குறைவால் தனது 44 ஆவது வயதில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் காலமானார்.
அண்மையில் படவிழாவில் பங்கேற்ற அவர், அப்போதே தனக்கு உடல்நிலை மோசமாகி வருவதாக பேசியிருந்தார்.
இந்நிலையில் அவரின் மறைவு திரையுலகில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
2002 ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘துள்ளுவதோ இளமை’.
இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் நடிகர் அபிநய்.
தமிழ் தவிர மலையாளம் உள்ளிட்ட திரையுலகிலும் நடிக்கத் தொடங்கினார்.
15இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
துப்பாக்கி பட வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கு பின்னணிக் குரல் கொடுத்தவரும் இவர்தான்.
2004 ஆம் ஆண்டு வெளியான ‘சிங்கார சென்னை’, 2005 ம் ஆண்டு வெளியான ‘பொன் மேகலை’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார்.
சூர்யாவின் ‘அஞ்சான்’, கார்த்தியின் ‘பையா’, ‘காக்கா முட்டை’ ஆகிய படங்களில் சில கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
அபிநய் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். படங்கள் வாய்ப்பு இல்லாததால் வருமானமின்றி வறுமைக்கும் தள்ளப்பட்டார்.
கல்லீரல் பாதிக்கப்பட்டு உடல்நலக் குறைவால், அடையாளம் தெரியாத அளவிற்கு மாறினார்.
அண்மையில் சிகிச்சைக்கு பண உதவி கோரியும் அபிநய் காணொளி வெளியிட்டிருந்தார்.
அவருக்கு நடிகர் தனுஷ், 5 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்த நிலையில், தனுஷ் இந்த நிதியுதவியை வழங்கினார்.
அதேபோல் நடிகர் KPY பாலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
