மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா -இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று புதன்கிழமை (02) இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில், மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை,குருநாகல் மறைமாவட்ட ஆயர் அந்தோணி பெரேரா ஆண்டகை,
மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார், ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக இன்று புதன்கிழமை (2.06) காலை 6.15 மணி அளவில் ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பாவனையும் அதனை தொடர்ந்து மடு அன்னையின் ஆசீர்வாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திருவிழா திருப்பலியில் அருட் தந்தையர்கள் அருட் சகோதரர்கள் திணைக்கள தலைவர்கள் உள்ளடங்கலாக இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த ஜூன் மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்தை தொடர்ந்து நவநாள் ஆராதனை திருப்பலிகள் இடம்பெற்று நேற்று செவ்வாய்க்கிழமை (01) மாலை வேஸ்பர்ஸ் ஆராதனை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.