வர்த்தக கலந்துரையாடலுக்காக இந்தியாவின் உயர் அதிகாரிகள் குழு இந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம்

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியாவின் உயர் அதிகாரிகள் குழு இந்த வாரம் அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்மொழியப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உள்ளதாகவும் இந்திய உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் இரு நாடுகளின் தலைவர்களும் அதிகாரிகளுக்கு வர்த்தக கலந்துரையாடலை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை 2025 ஆம் ஆண்டின் ஒக்டோபர் முதல் நவம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன.
கடந்த மாதம், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நியூயார்க்கில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
அந்தச் சந்திப்பிற்குப் பின்னர், பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க பேச்சுவார்த்தைகளைத் தொடர இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.