லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு – நீதி கோரி இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் போராட்டம்
![லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு – நீதி கோரி இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் போராட்டம் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு – நீதி கோரி இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் போராட்டம்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/protest.jpg)
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் சட்டமா அதிபரின் சிபாரிசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்ன்ர் இன்று பிற்பகல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சட்டமா அதிபர் பதவி விலக வேண்டும் என்றும், லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று முக்கிய சந்தேக நபர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவுகள் குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 27 ஆம் திகதி, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, இந்த வழக்கில் மூன்று முக்கிய சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடராது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பினார்.
பிரேம் ஆனந்த உதலாகம, தொன் திஸ்ஸ சிறி சுகதபால மற்றும் பிரசன்ன நாணாயக்கார ஆகியோரே சட்ட மாஅதிபரின் கடிதத்திற்கு ஏற்ப செயற்படுத்த வேண்டியவர்கள்.
பிரேம் ஆனந்த உதலாகம இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் உறுப்பினர் என்பதுடன் திஸ்ஸ சிறி சுகதபால கல்கிசை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப்பிரிவில் பணியாற்றிய முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரியாவார். பிரசன்ன நாணாயக்கார முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபராவார்.
லசந்த விக்ரமதுங்கவின் சாரதியாக பணியாற்றிய தேவ முல்லகே கருணாரத்னவை கடத்திச்சென்று அச்சுறுத்தியமை தொடர்பில் உதலாகம மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய இருவர் மீதும் அவர் கொலை செய்யப்பட்டபோது அவரது வாகனத்தில் இருந்த குறிப்பு புத்தகத்தில் காணப்பட்ட குறிப்புகளை அழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் பரிந்துரை மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த அரசாங்கம், இந்த விடயத்தை ஆராய்ந்து பரிந்துரையை ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளது.