டில்லியில் இன்று தேர்தல் ; ஆம் ஆத்மி – பாஜக இடையில் கடும் போட்டி
![டில்லியில் இன்று தேர்தல் ; ஆம் ஆத்மி – பாஜக இடையில் கடும் போட்டி டில்லியில் இன்று தேர்தல் ; ஆம் ஆத்மி – பாஜக இடையில் கடும் போட்டி](https://oruvan.com/wp-content/uploads/2025/02/Screenshot-2025-02-05-103637.png)
இந்திய தலைநகரான புதுடில்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்று புதன்கிழமை நடைபெறுவதுடன், வாக்குப் பதிவும் காலையிலேயே தொடங்கிவிட்டது.
1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு 13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரையில் நடைபெறுகிறது.
டில்லியில் 83,76,173 ஆண்கள், 72,36,560 பெண்கள் மற்றும் 1,267 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்பட 1,56,14,000 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் 18-19 வயதுடைய 2,39,905 பேர் புதிய வாக்காளர்களும் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 1,09,368 மூத்த வாக்காளர்களும் 79,885 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர்.
இந்தத் தேர்தலுக்காக சுமார் 97,955 காவல் துறையினரும் 8,715 தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். மத்திய ஆயுதக் காவல் படைகளைச் சேர்ந்த 220 குழுக்கள், 19,000 காவலர்கள் மற்றும் 35,626 தில்லி காவல்துறையினரும் ஆகியோர் அடங்குவர்.
சுமார் 3 ஆயிரம் வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை (பிப்.8) எண்ணப்பட உள்ளன.
டில்லி மாநிலத்தின் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி மற்றும் தேசிய ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு இடையில் இங்கு கடும் போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சரிசமமாக இருப்பதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.