யாழ் . கோட்டை மற்றும் சங்கிலியன் பூங்காவை அழகுபடுத்த திட்டம்

யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் நல்லூர் சங்கிலியன் பூங்கா என்பனவற்றை அழகுபடுத்தும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் கோட்டையை பல்வேறு பரிணாமங்களில் அழகுபடுத்தி எதிர்காலத்தில் அதன் ஊடாக வருமானம் மீட்டும் பொறிமுறைக்கு ஏற்றவாறு நகர அபிவிருத்தி அதிகார சபையால், தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் இந்தத் திட்டத்தை எப்படி முன்னெடுக்கலாம் என்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இந்த மாதம் யாழ்ப்பாணம் வருகைதரும்போது இது தொடர்பில் இறுதி முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை, கோட்டையைச் சுற்றியுள்ள அதன் எல்லைப் பகுதியை அடையாளப்படுத்தி வாகனங்கள் உள்நுழையமுடியாதவாறு மதில்கள் அமைக்கப்படுவதுடன், 5 நுழைவாயில்கள் ஊடாக மாத்திரமே உள்நுழைய அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் தொல்பொருள் திணைக்களத்தினரால் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் சங்கிலியன் பூங்காவை அழகுபடுத்தி சிறுவர்களுக்கான பூங்காவாக அமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக மேற்கொள்வதற்கு கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலர், யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலர்கள், யாழ். மாநகர சபை ஆணையாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், தொல்பொருள் திணைக்களத்தினர் கலந்துகொண்டனர்.
