சினிமாக்காரர்களின் குறைகளை பிரதமர் மோடி நிவர்த்தி செய்ய வேண்டும் – பொலிவுட் வர்த்தக சங்கம் கடிதம்
பொலிவுட் வர்த்தக சங்க தலைவர் சுரேஷ் ஷ்யாம் லால் குப்தா சினிமாத் துறையில் பணி புரியும் தொழிலாளர்கள் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாசாரத்தில் முக்கிய பங்காற்றுபவர்களில் பொலிவுட் திரைப்படங்களில் பணியாற்றுபவர்களும் அடங்குவர்.
ஆனால், அவர்களுக்கு குறைவான ஊதியம், நீண்ட நேரம் பணி, பாதுகாப்பு குறைபாட ஆகியவை காணப்படுகின்றன.
இவர்கள் ஒரு நாளில் 16 தொடக்கம் 20 மணித்தியாலங்கள் வரையில் ஓய்வின்றி வேலை செய்வதால் உடல் மற்றும் மனதால் பாதிக்கப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் தரக் குறைவான உணவுகளே வழங்கப்படுகின்றன.
வெளியிடங்களுக்கு படப்பிடிப்புகளுக்கு செல்லும்பொழுது பெண் தொழிலாளர்களுக்கு உடைகள் மாற்றுவதற்குக் கூட போதுமான வசதிகள் இல்லை.
இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கத்தில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
இவர்கள் சரியான ஒப்பந்தமின்றி பணியாற்றுவதால் பணி பாதுகாப்பும் இல்லை.
எனவே இது தொடர்பில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.