இந்தியா – இலங்கை தரைப்பாலம்: பிராந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா மாபெரும் திட்டம்?

இந்தியா – இலங்கை தரைப்பாலம்: பிராந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா மாபெரும் திட்டம்?

–  தர்மராஜா ரஸ்மிலா

 

ஆசியப் பிராந்தியத்தின் மிக முக்கிய புவிசார் அரசியல் நகர்வாகப் பார்க்கப்படும் ‘இந்தியா – இலங்கை தரைப்பாலத் திட்டம்’, இலங்கைத் தீவின் பொருளாதார விதியை முற்றிலுமாக மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது எனப் புதிய ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்’ அண்மையில் வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், இத்திட்டத்தின் மூலம் இலங்கைக்குக் கிடைக்கவுள்ள நீண்டகால வர்த்தக நன்மைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

‘இந்திய-இலங்கை தரைவழி இணைப்பை மதிப்பிடுதல்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த உத்தியோகபூர்வ ஆய்வில், இரு நாடுகளுக்கும் இடையே அமையவுள்ள நேரடிச் சாலைத் தொடர்பானது இருதரப்பு வர்த்தகம், சுற்றுலா மற்றும் பிராந்திய உட்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

முரண்பாடுகளும் சாத்தியக்கூறுகளும்

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தலைமைத்துவ மாநாட்டில் உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான நிலப்பரப்புத் தொடர்பை விவரித்திருந்தார்.

இவ்வளவு அருகாமையில் இருந்தும் நேரடித் தரைவழித் தொடர்பு இல்லாமல் இருப்பது ஒரு வரலாற்று முரண்பாடு என்றும், இத்திட்டத்தின் பின்னாலுள்ள பொறியியல் மற்றும் வணிகக் காரணங்கள் மிகவும் வலுவானவை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்த உரைக்கு பின்னரே, இந்த விவகாரம் மீண்டும் இரு நாட்டு ஊடகங்களிலும் பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது.

9 மணித்தியாலங்களாகச் சுருங்கும் போக்குவரத்து

தற்போதைய திட்டமிடலின்படி, இந்தியாவின் தனுஷ்கோடியையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் அதிவேகச் சாலை மற்றும் தொடருந்துப் பாலங்கள் அமைக்கப்படவுள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்வழிப் போக்குவரத்துத் தாமதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள கடல்வழிச் சுங்க நடைமுறைகள் மற்றும் துறைமுக நெரிசல்கள் காரணமாக, கப்பல் மூலம் சரக்குகளைக் கொண்டு சேர்க்கக் குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சமாக 122 மணித்தியாலங்கள் வரை எடுக்கிறது. ஆனால், இப்புதிய தரைப்பாலம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், இதே சரக்குப் போக்குவரத்தை வெறும் 9 மணித்தியாலங்களுக்குள் மிக எளிதாக நிறைவு செய்துவிட முடியும் எனப் புள்ளவிபரங்கள் தெரிவிக்கின்றன.

விழிஞ்சம் துறைமுகப் போட்டியும் கொழும்புத் துறைமுகத்தின் எதிர்காலமும்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் அண்மையில் திறக்கப்பட்ட விழிஞ்சம் ஆழ்கடல் துறைமுகம், சர்வதேசக் கப்பல் போக்குவரத்தில் கொழும்புத் துறைமுகத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இத்தகைய பிராந்தியப் போட்டிகளுக்கு மத்தியில், இந்தத் தரைப்பாலம் கொழும்புத் துறைமுகத்தின் வர்த்தக எல்லையைத் தென்னிந்தியா வரை விரிவாக்கம் செய்யும். இதனால் கொழும்புத் துறைமுகத்தின் சர்வதேசப் போட்டித்திறன் மேலும் பலமடங்கு உயரும்.

மாகாணப் பொருளாதார எழுச்சியும் சூழலியல் எச்சரிக்கையும்

இந்த நேரடித் தரைவழி இணைப்பானது இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் தலைகீழாக மாற்றியமைக்கக் கூடியது. குறிப்பாக, வரும் 2034ஆம் ஆண்டளவில் சுமார் ஒரு டிரில்லியன் டொலர் பொருளாதாரமாக அசுர வளர்ச்சி காணவுள்ள தென்னிந்தியாவின் (குறிப்பாக தமிழ்நாட்டின்) சந்தையுடன், இலங்கையின் பின்தங்கிய மாகாணங்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ள இத்திட்டம் வழிவகுக்கும்.

குறைந்த செலவிலான இந்தத் தரைவழி அணுகுமுறை, தென்னிந்தியப் பயணிகளை இலங்கை நோக்கி அதிகளவில் ஈர்க்கும் என்பதால், உள்ளூர் மாகாணங்களில் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இருப்பினும், இத்திட்டத்தின் சாதகங்களை விவரித்துள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது. பாக்கு நீரிணை மற்றும் ராமர் பாலம் (ஆதாம் பாலம்) அமைந்துள்ள கடல் பகுதி, அரிய கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடங்களைக் கொண்ட அதீத உணர்திறன் மிக்க மண்டலமாகும். எனவே, இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக, சர்வதேசத் தரத்திலான விரிவான சூழலியல் தாக்க மதிப்பீடு (EIA) செய்யப்படுவது கட்டாயமாகும் என அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )