க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம் : கல்வியால் வடக்குக்கு பெருமை சேர்க்க ஆளுநர் அழைப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம் : கல்வியால் வடக்குக்கு பெருமை சேர்க்க ஆளுநர் அழைப்பு

2025-ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை நாடு முழுவதும் ஆரம்பமாகின்றன. இம்முறை 3,545 நிலையங்களில் 4 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரீட்சை எழுதவுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் மட்டும் 26,299 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களுக்காக மாகாணம் முழுவதும் 248 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், “கடந்த காலப் பின்னடைவுகளைத் தகர்த்தெறிந்து, இம்முறை வடக்கு மாகாணத்தின் கல்வி வரலாற்றில் நீங்கள் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள்” எனத் தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

மாகாணத்தின் கல்வி நிலையை உயர்த்தத் தனது நேரடி மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட விசேட இணையவழி கற்றல் செயல்பாடுகள் மாணவர்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வித பதற்றமும் இன்றி, தன்னம்பிக்கையுடன் பரீட்சையை எதிர்கொள்ளுமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ள ஆளுநர், பரீட்சை பெறுபேறுகள் ஒரு புள்ளிவிவரம் மட்டுமே என்றும், மாணவர்கள் அனைவரும் உயர்தரத்திற்குத் தகுதி பெற வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை காலை 8.30-க்குப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளதால், மாணவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே மண்டபங்களுக்குச் சமூகமளிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )