
நீர்கொழும்பில் உயரமான கட்டித்தில் இருந்து விழுந்த வெளிநாட்டு பெண் உயிரிழப்பு
நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் கட்டிடம் ஒன்றில் இருந்து விழுந்து 26 வயது ஸ்வீடிஷ் நாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோட்டலின் ஒன்பதாவது மாடியில் உள்ள அறையில் அந்தப் பெண் தற்காலிகமாக தங்கியிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணைகளில், அந்தப் பெண் திருமணமானவர் என்றும், அவரது கணவர் ஒரு தொழிலதிபர் என்றும் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் அவரது கணவர் தொழில் நிமித்தமாக குருநாகலுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அந்தப் பெண் விழுந்ததற்கு முன்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தொலைபேசி அழைப்பில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணுடையது என்று நம்பப்படும் கையடக்க தொலைபேசி ஒன்று மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளார்.
அவரது அறிவுறுத்தலின் பேரில், சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
உடலில் பலத்த காயங்கள் இருப்பதாகவும், சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
