
இங்கிலாந்து அணி வீரருக்கு அபராதம்!
ஆஷஸ் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது, இங்கிலாந்து அணியின் வீரர் ஹரி புரூக் (Harry Brook) இரவு விடுதி ஒன்றின் பவுன்சருடன் (Bouncer) வாக்குவாதத்தில் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த அக்டோபர் 31ஆம் திகதி வெலிங்டனில் உள்ள இரவு விடுதிக்குச் சென்ற புரூக், அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததாகக் கூறி உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்.
இதனால் அங்குள்ள பவுன்சருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், புரூக் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து புரூக் உடனடியாக அணியின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை விசாரித்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை, புரூக்கின் நடத்தை நாட்டின் கௌரவத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கருதி, அவருக்கு அதிகபட்ச அபராதத் தொகையான 30,000 பவுண்ட் விதித்துள்ளது.
இருப்பினும், அவர் தலைவர் பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மன்னிப்புக் கோரியுள்ள ஹரி புரூக், ” தனது செயல் இங்கிலாந்து அணிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டது.
இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் பொறுப்புடன் நடப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 4 -1 என்ற கணக்கில் படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், வீரர்களின் இத்தகைய களத்திற்கு வெளியிலான செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.
இங்கிலாந்து வீரர்கள் தொடரின் போது தொடர்ந்து மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டிருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆஷஸ் முடிந்து நாடு திரும்பும் புரூக், வரும் ஜனவரி 19ஆம் திகதி இலங்கைத் தொடருக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளவுள்ளார்.
தலைவராக அவர் எதிர்கொள்ளும் முதல் பெரிய தொடராக பெப்ரவரியில் நடைபெறவுள்ள டி20 கிண்ணம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
