
இயற்கை பேரிடர் – இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும் சாத்தியம்
இலங்கையில் டித்வா சூறாவளி ஏற்படுத்திய பேரிடர் காரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் சுமார் 0.5 சதவீதம் முதல் 0.7 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபர்ஸ்ட் கேபிடல் ரிசர்ச் (FCR) வெளியிட்ட ஃபிளாஷ் நோட் இதனை தெரிவித்துள்ளது.
2016 வெள்ளம் மற்றும் 2004 சுனாமி ஏற்படுத்திய தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த இந்த மதிப்பீடு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நுகர்வு, முதலீடு மற்றும் நிகர ஏற்றுமதிகளில் ஏற்படும் இடையூறுகள் அரசாங்கத்தின் நிவாரண செலவினங்களால் உருவாக்கப்பட்ட தற்காலிக பொருளாதார நடவடிக்கைகளை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய சேதங்கள் மற்றும் பின்னடைவு இருந்தபோதிலும், 2026ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி மதிப்பீட்டை 3.0 சதவீதம் முதல் 4.0 சதவீதமாக காணப்படும் என ஃபர்ஸ்ட் கேபிடல் ரிசர்ச் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 68 சதவீதமாக இருக்கும் தனியார் நுகர்வு மீது பாதகமான வானிலை நிலைமைகள் பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாய உற்பத்தி, கிராமப்புற வீடுகளில் வருமான இழப்புகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சேதம் ஆகியவை நுகர்வோர் தேவையை குறைக்க வாய்ப்புள்ளது.
அவசர நிவாரணம் மற்றும் உள்கட்டமைப்பு பழுதுபார்ப்பு காரணமாக அரசாங்க செலவினம் மிதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பலவீனமான தனியார் தேவையை முழுமையாக ஈடுசெய்ய இது போதுமானதாக இருக்காது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
தனியார் துறை செயல்பாடுகள் இடையூறுகளை எதிர்கொள்வதால் முதலீட்டு நடவடிக்கைகளும் பலவீனமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் பணவீக்க அழுத்தம் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முக்கிய பணவீக்கம் சுமார் 40 அடிப்படை புள்ளிகள் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வெள்ளம் அறுவடை, சேமிப்பு மற்றும் போக்குவரத்தை சீர்குலைத்துள்ளது, இதனால் காய்கறிகள், தேங்காய் மற்றும் பழங்கள் போன்ற முக்கிய உணவு வகைகளில் விநியோக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, 2026 ஆம் ஆண்டிற்கான ஆண்டு சராசரி பணவீக்க மதிப்பீடு, முந்தைய கணிப்பான 2.9 சதவீதத்திலிருந்து 3.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முக்கிய அந்நிய செலாவணி ஈட்டித் தரும் சுற்றுலா, கொழும்பில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடலோர ஹோட்டல்களுக்கு ஏற்படுத்திய சேதம் காரணமாக,குறுகிய கால பின்னடைவை எதிர்கொள்கிறது.
இதன்படி, 2025 சுற்றுலா வருவாய் கணிப்பை 3.2 பில்லியன் டொரலாக ஃபர்ஸ்ட் கேபிடல் ரிசர்ச் குறைத்துள்ளது. எனினும், 2026 ஆம் ஆண்டின் வருவாய் 3.7 பில்லியன் டொலராக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், அடுத்த ஆறு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர் பணம் அனுப்புதல் 10-15 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2026 ஆம் ஆண்டில் 8.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
