வங்கி அட்டைகளை கொண்டு பேருந்து கட்டணம் செலுத்தும் முறைக்கு எதிர்ப்பு

வங்கி அட்டைகளை கொண்டு பேருந்து கட்டணம் செலுத்தும் முறைக்கு எதிர்ப்பு

பயணிகள் பேருந்து கட்டணத்தை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் புதிய திட்டத்திற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த திட்டம் வெற்றிபெற, பேருந்து நடத்துனர்கள் பதவி விலக வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நடத்துனர்கள் இருக்கும் வரை இந்த திட்டம் வெற்றிபெறாது. அரசாங்கம் தேவையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை உருவாக்க வேண்டும். இல்லையெனில், இதை செயல்படுத்த முடியாது.” அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் இல்லாமல் இது செயல்படுத்தப்பட்டால், இந்த திட்டம் கடந்த காலத்தில் நடந்த ஒரு முன்னோடி திட்டமாக வரலாற்றில் இடம்பிடிக்கும் என்றும், இது ஒரு தினசரி மோசடியாக மாறும் என்றும் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டுகிறார்.

இந்த திட்டங்களை அரை மனதுடன் செயல்படுத்த வேண்டாம் என்றும், நாட்டை கேலிக்குரியதாக மாற்றக்கூடாது என்றும் பொறுப்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க, இந்த அட்டை முறையின் நன்மையை சுட்டிக்காட்டினார்.

“தனியார் பேருந்துகளின் நாளாந்தம வருமானத்திலிருந்து எங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் கிடைப்பதில்லை. இருப்பினும், இந்த அட்டை முறையில் பேருந்து உரிமையாளரின் வருமானம் பாதுகாக்கப்படுகிறது.”

இருப்பினும், இந்த முறைக்கு வங்கிகள் வசூலிக்கும் தரகு பணம் குறித்து ரணசிங்க தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

போக்குவரத்து அமைச்சகத்துடனான கலந்துரையாடல்களின் போது, ​​இந்த தரகு பணம் ஒரு வீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று அரசு தரப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டிய சம்பத் ரணசிங்க, தற்போது 1.3 வீதம் மற்றும் 1.8 வீத வரம்பில் தரகு பணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளதாகக் கூறினார்.

கடந்த காலங்களில், பேருந்து பயணிகள் டிக்கெட்டுகளில் பல மோசடிகள் நடப்பதாகவும், பேருந்து கட்டணம் செலுத்திய பிறகு மீதமுள்ள தொகையை செலுத்தாதது உட்பட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணத்தை செலுத்தும் முறையை அறிமுகப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையின்படி, வங்கி அட்டைகள் மூலம் பேருந்து பயண கொடுப்பனவுகளை செய்யும் திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This