வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகம்

நாட்டில் முதன்முறையாக வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தில் இடம்பெற்றிருந்தது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் செயல்படுத்தப்படுகிறது.
முதல் கட்டத்தில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி சுமார் 20 வழித்தடங்களில் வழங்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, மாகும்புரவிலிருந்து காலி, மாத்தறை, பதுளை நோக்கிச் செல்லும் பேருந்துக, கொழும்பு முதல் அம்பாறை வரை இயக்கப்படும் பேருந்துகள், கடவத்தை முதல் பொரளை வரை இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் மொனராகலை முதல் பிபில வரை இயக்கப்படும் பேருந்துகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பதுளை முதல் பண்டாரவளை மற்றும் பதுளை முதல் மஹியங்கனை வரை இயக்கப்படும் பேருந்துகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில், தனியார் பேருந்துகளுக்கு மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஏழு தனியார் மற்றும் அரசு வங்கிகள் ஏற்கனவே வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதியை வழங்குவதில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.
இது பயணிகளின் மீதமுள்ள பணத்தை வழங்குவதில் உள்ள சிக்கலுக்கு ஒரு தீர்வை வழங்கும் என்பதுடன், பேருந்து உரிமையாளர்கள் பெறும் வருமானத்தை துல்லியமாக கணக்கிட உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
