கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – துப்பாக்கித்தாரி கைது

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை கொலை செய்த துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 7ஆம் திகதி கொட்டாஞ்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கார் ஒன்றில் வந்த நபரொருவர் துப்பாக்கியால் சுட்டு இந்தக் கொலையைச் செய்திருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதற்கமைய, விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபர் நேற்று (19) ஹசலக, கொலொங்கொடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டபோது, அந்த துப்பாக்கிதாரியிடம் இருந்து 12 கிராம் 300 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 39 வயதுடையவர் எனவும், கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் வைக்கப்பட்டு, கொழும்பு குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
