உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன – ஜனாதிபதி அநுர குமார

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த தாக்குதல்களுக்கு பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணரும் அரசாங்கத்தின் முயற்சியை ஒருபோதும் தடுக்க முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி, முக்கிய அறிக்கைகளின் பக்கங்கள் கிழித்தெறியப்பட்டுள்ளதாகவும், ஆனால் அரசாங்கம் ஏற்கனவே புதிய ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஆதாரங்கள் அழிக்கப்பட்டாலும் உண்மையை நாங்கள் வெளிக்கொணர்வோம்” என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைவர் ஷானி அபேசேகர மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் இரவும் பகலும் உழைத்து வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், வெகு விரைவில் அவர்கள் உண்மையை வெளிப்படுத்துவார்கள்,” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திருகோணமலை சம்பவம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் அறிக்கை கோரியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டில் இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை எனவும், நாட்டின் அனைத்து இன மக்களும் இனவாதத்தை நிராகரிக்கின்றனர் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
எனவே, பழைய இனவாத நாடகங்கள் இனி இந்நாட்டில் எடுபடாது எனவும், இனவாதத்தை கொண்டு இனி அரசியல் வரலாற்றை எழுத முடியாது.” எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
