பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் – 13 பேர் உயிரிழப்பு

லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக லெபனான் சுட்டிக்காட்டியுள்ளது.
இன் எல் ஹிலாவேயில் உள்ள மசூதிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை ட்ரோன் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர நகரமான சிடோனின் புறநகரில் இந்த தாக்குதல் நடந்ததாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேல், அகதிகள் முகாமில் ஹமாஸ் உறுப்பினர்கள் பயிற்சி பெறுவதாக குற்றம் சுமத்தியுள்ளது.
வடக்கு எல்லைக்கு ஏற்படும் எந்த அச்சுறுத்தலையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று இஸ்ரேலிய இராணுவத்தின் அரபு செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், லெபனானில் ஹமாஸ் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளை ஹமாஸ் முற்றிலும் மறுத்துள்ளது.
லெபனானில் உள்ள அகதிகள் முகாம்களில் பயிற்சி வசதிகள் இல்லை என்று ஹமாஸ் பதிலளித்துள்ளது.
எவ்வாறாயினும், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு லெபனான் ஏற்கனவே தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 69,483 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன், 170,706 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
