மக்காவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் பலி

சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கான புனிதப்பயணத்திற்காக பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
முஃப்ரிஹாத் அருகே இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்து மீது டீசல் லொறியொன்று மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறந்தவர்களில் பலர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் போது பல பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், மோதலுக்குப் பிறகு பேருந்து தீப்பிடித்து எரிந்தபோது அவர்கள் தப்பிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் சுமார் 11 பெண்களும் 10 குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள் வெளியான போதிலும், அந்த தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
