350 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
சிறுவர் நோய், புற்றுநோய், நீரிழிவு, உயர் குருதியழுத்தம் உள்ளிட்ட நோய் நிவாரண மருந்துகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மருந்துகளின் விலைகள் 60 முதல் 70 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
விலை குறைக்கப்பட்டுள்ள மருந்துகளின் பெயர்ப் பட்டியலை ஊடகங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரத்தில் மேலும் 200 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்க அதிகார சபை தீர்மானித்துள்ளது.
மருந்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த உயர்ந்தபட்ச சில்லறை விலையை விடவும் அதிக விலைக்கு அதனை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
மருந்தகங்களில் மாத்திரமின்றி தனியார் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளர்களுக்கு தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் விலை நிர்ணயத்திற்கமைய மருந்துகளை விற்பனை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
