ரெய்னா மற்றும் தவான் ஆகியோரின் சொத்துகள் முடக்கம்

முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்குச் சொந்தமான 11.14 கோடி ரூபா மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கியூராகோவை (Curacao) தளமாகக் கொண்ட ஒன்லைன் சூதாட்ட தளமான 1xBet தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது
இதன்படி, ஷிகர் தவானுக்குச் சொந்தமான 4.5 கோடி ரூபா மதிப்பிலான அசையாச் சொத்துக்களும், சுரேஷ் ரெய்னாவுடன் தொடர்புடைய 6.64 கோடி ரூபா மதிப்பிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் அடங்கும்.
பந்தயத் தளத்துடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களுடன் இந்த வீரர்கள் விளம்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரெய்னா மற்றும் தவான் தவிர, யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பாவிடமிருந்தும் இது தொடர்பாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரபல நடிகர் சோனு சூட், முன்னாள் எம்பி மிமி சக்ரவர்த்தி, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா மற்றும் பெங்காலி நடிகர் அங்குஷ் ஹஸ்ரா ஆகியோரிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் இந்தத் தளம் சட்டவிரோதமானது என்று தெரிந்தும் வீரர்கள் இந்த ஒப்பந்தங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோத ஆன்லைன் பந்தய நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வரும் அமலாக்கத்துறை, இந்த பிராண்டை விளம்பரப்படுத்திய பிரபலங்களின் நெட்வொர்க்கை ஆய்வு செய்து வருகிறது.
இந்த விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட வருமானம், பணமோசடி செய்யப்பட்ட சொத்துக்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதா என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து அமலாக்கத்துறை விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
