சட்டமன்ற தேர்தலில் 100 வீதம் வெற்றி உறுதி!! விஜய் நம்பிக்கை

சட்டமன்ற தேர்தலில் 100 வீதம் வெற்றி உறுதி!! விஜய் நம்பிக்கை

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 100 வீத வெற்றி நிச்சயம் என அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையே மட்டும் தான் போட்டி என்பதை மீளவும் கூறிக்கொள்வதாகவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று காலை இடம்பெற்றது. கரூர் சம்பவம் நடந்து 38 நாட்களுக்கு பின், கட்சி நிர்வாகிகளுடன், பொதுக்குழு கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டார்.

இதில் 1400க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது உரையாற்றிய விஜய்,

கரூர் சம்பவத்தில் குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனையில் இருந்தோம். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக அமைதி காத்திருந்தோம். எங்கள் கட்சிக்கு எதிராக வன்ம அரசியல் வலை பின்னப்பட்ட‌து.

கரூர் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் வன்மத்துடன் பேசியிருக்கிறார். அதே சட்டப்பேரவையில் தவெகவுக்கு எதிரான உரைக்கு பதிலடி கொடுக்க விரும்புகிறேன்.

உச்ச நீதிமன்றில் திமுக அரசு திக்கித் திணறி நின்றது. கரூர் சம்பவம் குறித்து அதிகாரிகள் அவசர அவசரமாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். ஒரு நபர் ஆணையம் விசாரணை செய்திருந்தது.

இந்நிலையில், ஒருநபர் ஆணைத்தை அவமதிக்கும் வகையில் அதிகாரிகள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

கரூர் சம்பவத்தில் உண்மை நிலையை தெளிவுப்படுத்த வேண்டும் என கூறி, சட்ட ரீதியாகவும் சாமர்த்தியமாகவும் பேசுவதாக நினைத்து கொண்டு 50 வருட அரசியல் அனுபவம் உள்ள முதலமைச்சர் சட்டப்பேரவையில் உரையாற்றியது ஒரு வடிக்கட்டின பொய்.

இதை நான் சொல்லவில்லை. உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. 2026ம் ஆண்டு திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள், புரிய வைப்பார்கள், மனிதாபிமானம், மாண்பு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேடுகிறார் முதலமைச்சர்.

கேள்வி கேட்க ஆளே இல்லாமல் போனதால் திமுக தலைமை இப்படி இருக்கிறது. இந்த இடையூறு அனைத்தும் தற்காலிகமே. மக்களோடு கைகோர்த்து மக்களுக்காக நிற்போம்.

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தலில் இரு தரப்பினர்களுக்கு மட்டுமே போட்டி. 100 சதவீதம் வெற்றி நமக்கே” என்று விஜய் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This