க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்தபெறுபேறுகளை பெற்ற ஊவா மாகாண மாணவர்கள் கெளரவிப்பு

க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்தபெறுபேறுகளை பெற்ற ஊவா மாகாண மாணவர்கள் கெளரவிப்பு

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் ஊவா மாகாண நிகழ்ச்சித் திட்டம் இன்று (02) காலை பதுளை நூலக கேட்போர் கூடத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 6 பாடப் பிரிவுகளின் கீழ் 1-10 இடங்களைப் பெற்ற 240 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வீதம் ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்காக ஜனாதிபதி நிதியத்தால் 24 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே வரவேற்புரை நிகழ்த்தியதோடு
நோக்கத்தையும் தெளிவுபடுத்தினார்.

நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, தற்போதைய அரசாங்கம் கல்வியில் மிகப்பெரிய முதலீட்டைச் செய்து வருவதாகவும், ஒரு நாட்டில் கல்வியில் முதலீடு செய்வது போன்ற முக்கியமான மற்றும் மதிப்புமிக்க முதலீடு எதுவும் இல்லை என்றும் கூறினார். குழந்தைகள் பெறும் கல்வி மூலம் நாட்டிற்கு சேவை செய்தால், அந்த முதலீட்டின் பலனை நாடு அடைய முடியும் என்று சபாநாயகர் தெரிவித்தார் .

கல்வி மூலம் கல்வி ஞானமுள்ளவர்களாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.ஒரு புத்திசாலி ஒருபோதும் அணுகுண்டை உருவாக்க மாட்டார்.கல்வி கற்றவனாகி இருந்து ஏமாற்றினால், அந்தக் கல்வியில் எந்த மதிப்பும் இல்லை.அந்த இடத்தில் ஞானம் இல்லை,கல்வி மட்டுமே உள்ளது. எனவே, உங்கள் கல்வி நாட்டிற்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப்பட்டால், உங்கள் பெற்றோர் உங்களை வளர்க்க வழங்கிய போசாக்கான சாப்பாட்டிற்கு நியாயம் கிடைக்கும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, புதிய அரசாங்க எண்ணக்கருவின் படி பிள்ளைகளின் வாழ்க்கையை வலுப்படுத்த இதுபோன்ற பங்களிப்பைச் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறினார். இந்த வாய்ப்பை வழங்கிய ஜனாதிபதி நிதியத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், இந்த நாட்டில் கல்வி பெறும் குழந்தைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் ஜனாதிபதி நிதியம் நிறுவப்பட்டது. தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்தை நெறிப்படுத்தும் நோக்கில் பிராந்திய மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. எனவே, தகுதியான பயனாளிகள் தற்போது நிதியத்தின் நன்மைகளைப் பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, ஜனாதிபதி நிதியத்தை பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்குவது குறித்த விசேட ஒரு நாள் செயலமர்வு நேற்று (01) பதுளையில் நடைபெற்றது. இதில் ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் விடயத்திறகுப் பொறுப்பான அலுவலர்கள் பங்கேற்றனர்.

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சுதத் பலகல்ல, சட்டத்தரணி சரத் குமார, பதுளை மேயர் பந்துல ஹபுகொட, ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ, ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்ன, பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேரத்ன, மொனராகலை மாவட்ட செயலாளர் ஏ.ஜி. நிஷாந்த, அரசு அதிகாரிகள் மற்றும் புலமைப்பரிசில் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

Share This