இலங்கை – இந்திய மின் இணைப்புத் திட்டம் இறுதிக்கட்டத்தில்

இலங்கை – இந்திய மின் இணைப்புத் திட்டம் இறுதிக்கட்டத்தில்

இந்தியா மற்றும் இலங்கையின் தேசிய மின்சார கட்டமைப்புக்களை இணைக்கும் திட்டம், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு, இப்போது நடைமுறைக்கு வரும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, இரு நாடுகளுக்கும் இடையே 1000 மெகாவாட் மின்சாரத்தை இருவழிப் பரிமாற்றம் செய்ய முடியும்.

இந்நிலையில், இரு நாட்டு அதிகாரிகள் குழு மெய்நிகர் மூலம் இந்த திட்டம் குறித்து கடந்த வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் இந்திய குழுவுக்கு ஒன்றிய மின்துறை செயலாளர் பங்கஜ் அகர்வாலும், இலங்கை குழுவுக்கு மின்வலுசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபாலவும் தலைமை தாங்கினர்.

இருதரப்பு அதிகாரிகளும் மின்கட்டமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அம்சங்கள் குறித்து கலந்துரையாடினர்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,

‘இலங்கையின் எரிசக்தி பாதுகாப்புக்கு 1,000 மெகாவாட் மின் இணைப்பு திட்டம் மிகவும் முக்கியமானது.

மின் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் இலங்கையால் இந்தியாவில் இருந்து உத்தேச இணைப்பு திட்டத்தின் மூலம் மின்சாரத்தை இறக்குமதி செய்ய இயலும்.

மேலும் உபரியாக இருக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை அந்நிய செலாவணியை ஈட்ட முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் 2002 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தியா – இலங்கை மின் கட்டமைப்பு இணைப்பிற்கான யோசனை 1970 களிலிருந்தே பேசப்பட்டிருந்தாலும், தீவிரமான நடவடிக்கைகள் 2002 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமாகின.

2010 ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளின் அரசாங்கங்களும் ஒரு விரிவான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தன.

இவ்வாறு நீண்ட கலந்துரையாடல்களுக்கு பின்னர், தற்போது உத்தேச மின் இணைப்பு திட்டம் குறித்து ஒரு இலக்கை அடைய இருநாடுகளும் தீர்மானித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

Share This