ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் வேலைநிறுத்தம் தீவிரம்

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், அண்மையில் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தத்தை, காலவரையற்ற
வேலைநிறுத்தமாகத் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் செயன்முறையானது தற்போது குழப்பத்தில் இருந்து அதிக குழப்பத்தை
நோக்கிச் சென்றுள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தச் செயன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தடம் தற்போதைய பதில் துணைவேந்தர் மற்றும்
பதிவாளர் ஆகியோரின் தன்னிச்சையான, சட்டவிரோதமான மற்றும் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக,
காலவரையற்ற வேலைநிறுத்தமாகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக நிர்வாக சபையின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, தற்போதைய பதில் துணைவேந்தரும் பதிவாளரும் இணைந்து,
புதிய துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களைக் கோரி செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளனர்.
இந்தத் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான நிர்வாகச் செயன்முறை உட்பட கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த பல்வேறு
அரசியல் தலையீடுகளுக்குப் பின்னால் பதில் துணைவேந்தரே இருப்பதாகப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
