தெற்காசியத் தடகள செம்பியன்ஷிப் போட்டியின் பதக்கப்பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 04 ஆவது தெற்காசியத் தடகள செம்பியன்ஷிப் போட்டியின் பதக்கப்பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இதற்கமைய இலங்கை 16 தங்க பதக்கங்கள், 14 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 10 வெண்கலம் பதக்கங்கள் உட்பட 40 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
தெற்காசியத் தடகள செம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை வீராங்கனை சாஃபியா யாமிக் மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அத்துடன், பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தனது போட்டி தூரத்தை 23.58 வினாடிகளில் நிறைவு செய்து புதிய சாதனையும் அவர் படைத்தார்.
இதன்படி 27 ஆண்டுகளுக்கு முன்பு, 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் பி.டி. உஷா படைத்த சாதனையை சாஃபியா யாமிக் முறியடித்துள்ளார்.
அத்துடன் சாஃபியா யாமிக் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தெற்காசியாவின் வேகமான தடகள வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அதன்படி, இந்த செம்பியன்ஷிப்பில் போட்டியில் சாஃபியா யாமிக் 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
அதேபோன்று, ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த சுசீந்திரகுமார் மிதுன்ராஜ், 14.68 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப்பதக்கத்தை வெற்றிகொண்டார்.
ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தலவாக்கலை மிட்ல்டன்தோட்டத்தைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷான் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
அத்துடன், சமோத் யோதசிங்க மற்றும் சாஃபியா யாமிக் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று தெற்காசியாவின் அதிவேக ஓட்ட வீரர், அதிவேக ஓட்ட வீராங்கனையாகச் சாதனை படைத்தனர்.
மேலும் சர்வதேச அளவில் அறியப்பட்ட ஓட்ட வீரரான கலிங்க குமாரகே (Kalinga Kumarage), ஆண்களுக்கான 400 மீற்றர் இறுதிப் போட்டியில் 46.21 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கத்தை வென்று, இலங்கை தனது ஆதிக்கத்தைத் தொடர உதவினார்.
மேலும் இந்த பதக்கப்பட்டியலில் இந்தியா 48 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
இந்தியா 20 தங்கப் பதக்கங்களையும், 20 வெள்ளிப் பதக்கங்களையும் 18 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளது.
அத்துடன் இந்த பட்டியலில் நேபாளம் 2 பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளதுடன், பங்களாதேஷ் 3 வெண்கலப் பதக்கங்களுடன் பட்டியலில் நான்காமிடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் 1 வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ள மாலைத்தீவு ஐந்தாம் இடத்தில் உள்ளதுடன் பதக்கம் எதுவுமின்றி பூட்டான் இறுதியிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
