லசந்த விக்ரமசேகர படுகொலை!! சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணை

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, நான்கு பொலிஸ் குழுக்கள் மூலம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத் தெரிவித்தார்.
நேற்று (22) காலை, வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர, அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சந்தேகநபர்கள் வெள்ளைச் சட்டை அணிந்து, கறுப்பு முகமூடி அணிந்தபடி, அலுவலகத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
உத்தியோகபூர்வ இருக்கையில் இருந்த தலைவர் லசந்த விக்ரமசேகரவை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சுமார் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதையும், மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வதையும் சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த தலைவர், மாத்தறை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டின் விளைவாக பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் தலை, கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் நான்கு பொலிஸ் குழுக்கள் சம்பவம் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
எனினும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மிதிகம ருவானின் பிரிவினரால் இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தனக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி லசந்த விக்ரமசேகர ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஐஜிபிக்கு கடிதம் அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, இது ஒரு அரசியல் படுகொலை என்று கூறினார்.