கதிர்காமத்தில் உள்ள கட்டடம் – தனக்கு தொடர்பில்லை என்கிறார் கோட்டா

கதிர்காமத்தில் மெனிக் நதி அருகில் உள்ள கட்டடம் எனக்கு சொந்தமில்லை என கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாக மறுத்தார் – நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மொனராகலை நீர்ப்பாசன இயக்குநர் அப்துல் ஜப்பார் கட்டிடத்தைக் கையகப்படுத்தினார்.
கதிர்காமத்தில் மேனிக் கங்கை அருகே உள்ள கட்டடம் தனக்கு சொந்தமானது இல்லை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்று, அந்தக் கட்டடம் தனக்கு சொந்தமானது என தவறாக கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
”2025 ஒக்டோபர் 13, திங்கட்கிழமை அன்று, சில தொலைக்காட்சிகள் இந்தக் கட்டடம் தொடர்பாக எனது பெயரைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டன.
இந்தக் கட்டடத்தின் உரிமையைப் பற்றி குற்றப் புலனாய்வுத் துறை (CID) ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது. அந்த விசாரணையில் நானும் ஒரு அறிக்கையை வழங்கியிருந்தேன்,” என்று கோட்டாபய தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் தனது பெயர் குறிப்பிடப்பட்டதற்கு காரணம், “G. Rajapaksha” என்ற பெயரில் மின்சார இணைப்பு பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்
“அந்த விண்ணப்பத்தில் முறையான கையொப்பம் இல்லை. கையொப்பம் இருக்க வேண்டிய இடத்தில் தெளிவற்ற கிறுக்கல் ஒன்று மட்டுமே இருந்தது. இந்த தவறான செய்தி அவ்வப்போது மீண்டும் மீண்டும் வெளியாகி வருவதால், கதிர்காமத்தில் மேனிக் கங்கை அருகே உள்ள கட்டடம் எனக்கு சொந்தமானது இல்லை என பொதுமக்களின் அறிவிற்காக தெளிவாகக் கூறுகிறேன்,” என்றார்.
கோட்டாபய மேலும் கூறுகையில், கதிர்காமத்தில் எந்தவொரு கட்டடத்தையும் கட்டுவதற்கோ அல்லது பராமரிப்பதற்கோ தனக்கு எவ்வித காரணமோ அல்லது விருப்பமோ இல்லை என் தெரிவித்துள்ளார்.
கதிர்காமத்தில் மேனிக் கங்கை அருகே அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள இந்தக் கட்டடத்தில் 12 அறைகள் உள்ளன. இந்தக் கட்டடம் சட்டவிரோதமாக அரசாங்க நிலத்தில் கட்டப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையை ஆரம்பித்தது.
இந்த விசாரணை நல்லாட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இந்த விசாரணை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளின்படி, இந்தக் கட்டடம் 2010க்கு முன்னர் கட்டப்பட்டது மற்றும் இராணுவக் குழுவொன்றின் உழைப்பால் கட்டப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்ட இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஒருவர், கட்டடம் கட்டப்பட்ட பின்னர் அதில் தங்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கதிர்காமத்தில் மெனிக் கங்கைக்கு அருகில் உள்ள வீடு நீதிமன்றத்தால் நேற்று திங்கட்கிழமை (13) அன்று நீர்ப்பாசனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் துறையால் வழக்குத் தாக்கல் செய்ததற்கமைய குறித்த கட்டிடம் அரசாங்கத்திடம் வழங்கப்பட்டது.
மொனராகலை நீர்ப்பாசன இயக்குநர் அப்துல் ஜப்பார் குறித்த கட்டிடத்தைக் கையகப்படுத்தியதுடன் இந்தக் கட்டிடம் அரசாங்க அதிகாரிகளுக்கான தங்குமிடமாக பயன்படுத்தப்படும் எனவும், அதிலிருந்து அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.