ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா மகளிர் அணி புதிய சாதனை

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா மகளிர் அணி புதிய சாதனை

மகளிர் ஒருநாள் போட்டிகளின் வரலாற்றில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை துரத்தியடித்து அவுஸ்திரேலியா மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.

இந்திய அணிக்கு எதிராக நேற்று விசாகப்பட்டினத்தில்  நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண போட்டியில் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியா, ஒரு ஓவர் மீதமுள்ள நிலையில் வெற்றி இலக்கை அடைந்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது.

331 என்ற வெற்றி இலக்கை அவுஸ்திரேலியா மகளிர் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து அடைந்து இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 330 ஓட்டங்களை குவித்திருந்தது.  இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.

எனினும், அவுஸ்திரேலியா அணியின் தலைவி அலிசா ஹீலி இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை துவசம் செய்திருந்தார். 107 பந்துகளில் 142 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு களம் அமைத்துக்கொடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி வசம் இருந்த சாதனையை அவுஸ்திரேலியா அணி தன்வசப்படுத்திக்கொண்டது.

முன்னதாக 2024 ஆம் ஆண்டு போட்செஃப்ஸ்ட்ரூமில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 302 ஓட்டங்களை துரத்தியடித்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This