வாரியபொலவில் 33 மில்லியன் ரூபா செலவில் கழிவுகளை சேகரித்து, தரம்பிரித்து மீள் சுழற்சிற்கு உட்படுத்தும் நிலையம்

வாரியபொலவில் 33 மில்லியன் ரூபா செலவில் கழிவுகளை சேகரித்து, தரம்பிரித்து மீள் சுழற்சிற்கு உட்படுத்தும் நிலையம்

Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்துவதில் மற்றுமொரு முக்கிய படியாக, வாரியபொல பிரதேசத்தில் கழிவுகளை சேகரித்து, தரம்பிரித்து மீள் சுழற்சிற்கு உட்படுத்தும் புதிய நிலையத்தின் (MRF) நிர்மாணப்பணிகள் நேற்று (09) ஆரம்பிக்கப்பட்டது.

வாரியபொல பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் நிறுவப்படவுள்ள இந்தப் பொருட்கள் மீட்பு மையத்திற்கு 33 மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளது. உக்காத கழிவுகளாகக் கருதப்படும் பிளாஸ்டிக், பொலிதீன் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்களை முறையாக சேகரித்து, பிரித்து மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இந்தத் திட்டம் Clean Sri Lanka செயலகம் மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கூட்டு நிதியுதவியுடன் செயற்படுத்தப்படுவதுடன், நாட்டின் கழிவுப் பிரச்சினைக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளின் அளவைக் கணிசமாகக் குறைத்தல், மறுசுழற்சியை ஊக்குவித்து சுழற்சி பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் சுற்றாடல் மாசடைவதைக் குறைத்தல் என்பன இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதோடு, இந்த மையத்தின் மூலம் பிரதேசவாசிகளுக்கு புதிய ‘பசுமை வேலை’ வாய்ப்புகளும் உருவாக்கப்படும். நாடளாவிய ரீதியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் கீழ், 58 பொருள் மீட்பு மையங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளன. இதன் கீழ், இந்த ஆண்டு நான்கு பொருள் மீட்பு மையங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதுடன், முதல் மையம் சமீபத்தில் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்டது.

இது தவிர தலாவ மற்றும் தங்காலை பிரதேசங்களை மையப்படுத்தி மேலும் இரண்டு நிலையங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளன.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத், பாராளுமன்ற உறுப்பினரும் வாரியபொல தொகுதி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சுஜீவ திசாநாயக்க, வாரியபொல பிரதேச சபைத் தவிசாளர் ஜீ.ஜே.எஸ். குமாரசிங்க ஆகியோருடன் Clean Sri Lanka செயலகத்தின் பணிப்பாளர்களானஅஞ்சுல பிரேமரத்ன (சுற்றாடல்) மற்றும் இசுரு அனுராத (தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share This