பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்குவதை தடை செய்ய வர்த்தமானி

பொருள் கொள்வனவு செய்யும் பை உள்ளிட்ட பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்குவதைத் தடுக்கும் வகையில், எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அவற்றுக்கு கட்டணம் அறவிடப்படுவது தொடர்பான வர்த்தமானியை வெளியிட எதிர்பார்ப்பதாகச் சுற்றாடல் அமைச்சர் உட்பட பிரதிவாதிகள் இன்று (1) உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
பொலித்தீன் பாவனையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி, சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவொன்று பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.
இந்தக் கட்டண அறவீடு குறித்து மார்ச் மாதத்திலேயே உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், பிரதிவாதிகள் நடவடிக்கை எடுக்கத் தவறியதாலேயே மீண்டும் நீதிமன்றை நாட வேண்டியிருந்ததாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி ரவீந்திரநாத் தாபரே தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த பிரதி மன்றாடியார் நாயகம் அவந்தி பெரேரா, எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் கட்டணம் அறவிடும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என நீதிமன்றுக்கு அறிவித்தார்.