ஜெனீவாவில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் போராட்டம்: இலங்கையில் சுவிஸ் தூதரகத்திடம் எதிர்ப்புக் கடிதம்

ஜெனீவாவில் நடைபெற்று வரும் “விடுதலைப் புலிகள்” (LTTE) சார்பான போராட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இலங்கையில் அமைந்துள்ள சுவிஸ் தூதரகத்தில் “தேசபக்திக்கான தேசிய இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த அரசு, போர் வீரர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பினரால் ஒரு எதிர்ப்புக் கடிதம் ஒப்படைக்கப்பட்டது.
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைக் கூட்டத்தொடரின் சூழலில், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்வுகள் குறித்து கடும் கவலை மற்றும் எதிர்ப்பை தெரிவிப்பதே இக்கடிதத்தின் நோக்கமாகும்.
இலங்கையின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பிரதேசவாதத் தன்மை ஆகியவற்றை மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் நடக்கும் போராட்டங்கள், ஒரு தீவிரவாத அமைப்பை மீண்டும் உருவாக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த அமைப்பினர், இந்தக் கடிதம், போராட்டங்களால் ஏற்படக்கூடிய தவறான விளக்கங்களையும், இலங்கையின் நிலைத்தன்மைக்கு ஏற்படக்கூடிய சவால்களையும் சுட்டிக்காட்டி கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் சுவிஸ் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் இலங்கை அரசு தேவையான நடவடிக்கை எடுக்காமையினால் மக்களாகிய நாங்களே இதற்கு ஒரு தீர்வை எதிர்பார்த்து இன்று இந்த கடிதத்தை ஒப்படைத்தோம் என அவர்கள் குறிப்பிட்டனர்.